இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென்று, அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கால் லட்ச கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.
ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேறுவழியின்றி கால்நடையாக சொந்த ஊருக்கு திரும்பினர். அதைத்தொடர்ந்து மே 1ஆம் தேதி முதல் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று (ஜூலை 23) செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், "இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
அனைத்து மாநிலங்களின் தேவைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே சார்பில் கடைசியாக ஜூலை 9ஆம் தேதி ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மே 1ஆம் தேதி முதல் 4,615 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் 63 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில் டிக்கெட் கட்டணத்தில் 85 விழுக்காடு மத்திய அரசு செலுத்தியது. அதேபோல மீதமுள்ள 15 விழுக்காட்டை மாநில அரசுகள் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
மேலும், வரும் காலங்களில் தேவை ஏற்பட்டால் மீண்டும் இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில் இயக்கவும் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த 24 மணி நேரத்திற்குள் அரசியலைவிட்டே விலகிய முன்னாள் கால்பந்து வீரர்!