புதுச்சேரியில் காவலர் தேர்வு நாளை (நவம்பர் 4) நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதனை நிறுத்த உத்தரவு பிறப்பித்தார்.
இதனை கண்டிக்கும் விதமாக காவலர் தேர்வை திட்டமிட்டபடி 4ஆம் தேதி நடத்த வேண்டும், புதுச்சேரியில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட 30க்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள், காமராஜர் சதுக்கத்தில் இருந்து நேரு வீதி வழியாக சென்றனர்.
அங்கு ஆளுநர் மாளிகை அருகே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க... மக்கள் பணத்தை வீணடிக்கும் கிரண்பேடி - பரபரப்பு புகார்!