நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனா தொற்றால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, கரோனா தொற்றால் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழந்தனர். பல ஊழியர்கள் கரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு நிச்சயமாக இழப்பீடு வழங்கப்படும். அதன்படி, கரோனாவால் உயிரிழந்த நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய், ஒப்பந்த ஊழியருக்கு 5 லட்சம் ரூபாய், ஒரு ஆண்டாக பணிபுரியம் ஊழியர்களுக்கு 90 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்" என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா தரப்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், நமது ஈடிவி பாரத்துக்கு கிடைத்த தகவலின்படி ஏர் இந்தியாவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்தனர். அதே சமயம், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.