எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இந்த நாள்களில் மார்ச் 25லிருந்து மே ஒன்றாம் தேதிவரை 55 ஆயிரம் நோயாளிகளுக்கு தொலைபேசி மூலமாகவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதிக்காத 10 ஆயிரத்து 609 நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என எய்ம்ஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஆர்த்தி விஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது
கரோனா தொற்று சிகிச்சையைப் பொறுத்தவரை, ஜஜ்ஜாரில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் ஏபெக்ஸ் புறகாய மையம், தேசிய புற்றுநோய் மையம் (என்.சி.ஐ) ஆகியவற்றில் 2,301 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த இரண்டு மாதங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதற்கிடையில் 12 ஆயிரத்து 746 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, நாலாயிரத்து 83 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் அத்தனை பணியாளர்களுக்கும், வருகின்ற நோயாளிகளை எப்படி கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கரோனா தொற்று குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையும் மத்திய சுகாதார அமைச்சகம் இணைந்து 40க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.