சோனிபட் (ஹரியானா): விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் தோழமைகளுக்கு உணவு வழங்க, ரொட்டி தயாரிக்கும் இயந்திரத்தை பஞ்சாப் விவசாயிகள் களத்தில் இறக்கியுள்ளனர்.
புதிய வேளாண் சட்டத்தினை எதிர்த்து நாடு முழுவதிலும் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். அதன் அங்கமாக, டெல்லியில் பஞ்சாப் விவசாயிகளுடன் வேறு மாநில விவசாயிகளும் ஒன்றிணைந்து பெருமளவில் போராட்டத்தை நடத்துகின்றனர்.
போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவைப்படும் உணவுகளை விவசாயிகளே தயாரித்து வழங்கி வந்தனர். அதுமட்டுமில்லாமல், பணியிலுள்ள காவல் துறையினருக்கும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இச்சூழலில், போராட்டத்தின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக உணவினை தயார் செய்ய, ரொட்டி தயாரிக்கும் இயந்திரத்தை விவசாயிகள் வரவழைத்துள்ளனர்.
இதில் ஒரு மணிநேரத்திற்கு 900 ரொட்டிகள் வரை தயார் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மூன்று முறை, மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.