டெல்லியில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால், அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால்தான் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்னதாக கரோனா உறுதி செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு அல்லது ஏழு தொடர்புகள் கண்டறியப்பட்டன. ஆனால், இப்போது அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே சமீப நாள்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.
டெல்லியில் 40 விழுக்காடு கரோனா படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. சுமார் 9,500 படுக்கைகள் காலியாக உள்ளன.
மாநிலத்தில் தற்போது 32 ஆயிரத்து 719 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 476 நோயாளிகள் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல் இத்தொற்று காரணமாக இதுவரை டெல்லியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,511ஆக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: டெல்லியில் பேருந்துகள் வழக்கம் போல இயக்கம்!