கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நிலையம் தவிர்த்து மற்ற அனைத்தும் கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, ஊரடங்கை மே 31ஆம் நீட்டித்த மத்திய அரசு, பாதிப்பு அதிகளவில் ஏற்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களுக்கு சில தளர்வுகளை அறிவித்தது.
இதனால், கடந்த 57 நாள்களாக மூடப்பட்டிருந்த முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க மாநில அரசுகள் அனுமதி வழங்கின. மேலும், முடிதிருத்தும் நிலையங்களால் வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளதால், அதற்கு மத்திய, மாநில அரசுகள் சில வழிமுறைகளை வகுத்துள்ளன.
இந்நிலையில், கர்நாடக அரசின் ஆலோசனைக்கிணங்க, பெங்களூருவின் பாகலகுண்டே அருகே உள்ள 'ஸ்பின்' முடிதிருத்தும் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. முடிதிருத்த வந்த வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து வரவேற்பறையில் காத்திருந்தனர். நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு முடிதிருத்தம் செய்த பிறகு அவர்கள் பயன்படுத்திய நாற்காலிகள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும் அனைத்து பரிமாற்றங்களும் டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. நேற்று முடிதிருத்த நிலையத்திற்கு வருகை தந்த வடக்கு பெங்களூரு துணை காவல் கண்காணிப்பாளர் சஷிகுமார் , அனைத்து விதிமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்படுவதை பாராட்டினார்.
மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை வலி உள்ள வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார். முடிதிருத்தம் செய்வதற்கு முன்னும் பின்னும் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்கு ஏதுவாக நுழைவு வாயிலில் சானிடைசர்களை வழங்க வேண்டும்.
முடிதிருத்தும் ஊழியர்களும் கட்டாயமாக ஃபேஸ் மாஸ்க், ஹெட் கவர் மற்றும் ஏப்ரன் ஆகியவற்றை அணிய வேண்டும். ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தும் பொருள்களை ஏழு சதவிகித லைசோலைப் பயன்படுத்தி 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சுத்திகரிக்க வேண்டும்.
இதையும் படிங்க: கிழக்குப் பெங்களூரு மக்களை பீதிக்குள்ளாக்கிய விநோத சத்தம்!