ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பெருமளவு போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்க இலாகா அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரீப்பில் இருந்து வந்த ஒருவரை தடுத்து நிறுத்திய அலுவலர்கள் அவரை தனியே அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அவரை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கினர். சோதனையில், அவரது அடிவயிற்றில், 89 சிறு நெகிழி உருண்டைகள் கண்டறியப்பட்டன. பின்னர், மருத்துவ அலுவலர்களின் உதவியுடன் அவை மீட்கப்பட்டன. அந்த நெகிழி உருண்டைகளில் மொத்தம் 635.5 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதைப்பொருள் இருந்தது உறுதிசெய்யப்பட்டது. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.4.5 கோடி என சுங்க இலாகா அலுவலகம் கூறியுள்ளது.
இதையடுத்து, போதை பொருள்களை சுங்க இலாகா அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், போதை பொருள்களை கடத்தி வந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை சுங்க இலாகா அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
இதையும் படிங்க : 'கோவிட்-19 தடுப்பூசி குறித்து அவதூறு பேசிய அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும்' - கேசவ் பிரசாத் மெளரியா