புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஏடிஎம் மையம் ஒன்றில் பூபாலன் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் முகக்கவசம் அணியாமல் இருப்பதை ரோந்து பணியில் இருந்த காவல் துறையினர் கண்டுள்ளனர்.
பின்பு, அவரிடம் முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுவது குற்றமென கூறி, முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கோபமடைந்த பூபாலன், காவல் துறையினரிடம் மரியாதை குறைவாகப் பேசி, தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, பூபாலனை காவல் நிலையம் அழைத்து வந்து அமர வைத்துள்ளனர். இதற்கிடையில் பூபாலன் தனது தம்பி ஏசுராஜாவுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், அவர் தனது நண்பரான வழக்கறிஞர் ஒருவருடன் காவல் நிலையம் வந்துள்ளார்.
அங்கு, காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த வழக்கறிஞர், காவலர்களை மரியாதை குறைவாகப் பேசி, தகராறு செய்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.