புதுச்சேரி சட்டப்பேரவை முதலமைச்சர் அலுவலகம் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அன்பழகன், ”திமுக துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசானது, ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் அரசாக உள்ளது. ஆட்சி அமைந்த 42 மாதங்களில் 23 மாதங்களுக்கு இன்றுவரை அரிசி வழங்கவில்லை. வழங்காத அரிசிக்கு உண்டான பணமும் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை.
இலவச அரிசி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக துணைநிலை ஆளுநர் குற்றம் சுமத்தி அரிசி வழங்க கூடாது மாதந்தோறும் இலவச அரிசிக்காண பணத்தை அவரவர் குடும்பங்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அரிசியா? பணமா? என வழக்கம்போல் துணைநிலை ஆளுநருக்கும், அரசுக்கும் ஏற்படும் மோதல் போக்கை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் இந்த நிதியாண்டில் எட்டு மாதங்களில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 3.44 லட்சம் குடும்பத்தாருக்கும் அரிசி வழங்காமல், அதற்கான பணத்தையும் வங்கியில் செலுத்தாமல் இருப்பது நியாயமற்ற செயலாகும்.
இது சம்பந்தமாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசின் கவனத்திற்கு அதிமுக சார்பில் கொண்டு சென்றபோது, உடனடியாக அரிசியோ அல்லது அதற்குரிய பணமோ மக்களுக்கு வழங்குவோம் என முதலமைச்சரும், துறை அமைச்சரும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் சட்டப்பேரவையில் அளித்த வாக்குறுதியை மூன்று மாதங்களாகியும் நிறைவேற்றவில்லை.
காங்கிரஸ் அரசானது மக்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்காததை கண்டித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து உள்ளோம்” என்றார்.
பின்னர், நேரில் வந்து சமூகத் நலத் துறை அமைச்சர் கந்தசாமி சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் உறுதி அளித்ததின் அடிப்படையில் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதையும் படிங்க: