அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவர் தனபாலிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து, மூவரையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
அடுத்த சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி அரை மணி நேரத்தில், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சார்பில், பேரவைச் செயலர் சீனிவாசனிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதனை மேற்கோள்காட்டி, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க தடை விதிக்குமாறு ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தினகரன் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபில் ஆஜராகியிருந்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.