கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதை பொருள் விநியோகம் அதிகளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முக்கிய கன்னட பிரபலங்கள் பலரும் வரிசையாக சிக்கிகொண்டு வருகின்றனர். போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஹோட்டல் அதிபர்கள் விரேன் கண்ணா, முகமது அனூப், ராகுல் ஷெட்டி, பிரித்வி ஷெட்டி, முன்னாள் ஜனதா தள அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டு அவர்களை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள், காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.
இந்த நிலையில், ராகினி திவேதி நண்பரும் மாநில போக்குவரத்து துறை பணியாளருமான ரவிசங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ரகினியுடன் தான் நேரடி உறவில் இருந்ததாக ரவிசங்கர் விசாரணை அலுவலர்களிடம் தகவல் அளித்ததாகவும் திரையுலகில் போதைப்பொருள்களின் பரிமாற்றங்கள் குறித்த விபரங்களைக் கூறியதாகவும் மேலும் சில அதிர்ச்சிகரமான விபரங்களை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து அவரை காவல்துறையினர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். ரவிசங்கரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையை விரிவு படுத்த முடிவு செய்துள்ளனர்.