நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு இணையாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒஸ்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தெலுங்கு நட்சத்திர தம்பதிகளான நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவியும் நடிகை ஜீவிதா ஆகியோர் இணைந்தனர். அவர்கள் இருவரும் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
முன்னதாக இந்த தம்பதியினர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அதைத்தொடர்ந்து அதற்கு அடுத்த ஆண்டே அவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது ஜெகன்மோகன் ரெட்டிக்கு துணையாக நின்றனர்.
ஆனால் சில காலங்களுக்கு பின் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த 2014ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தனர். அங்கு அவர்களுக்கு உரிய இடம் கிடைக்காததையடுத்து தற்போது மீண்டும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர்.
கட்சியில் இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜசேகர், ஜெகன்மோகன் ரெட்டி தற்போது முற்றிலும் மாறுபட்ட மனிதராக தோன்றுகிறார். எங்களுக்குள் இருந்த கசப்பான அனுபவங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகதெரிவித்தார்.