புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமசிவாயம், கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் தற்போது மூன்று பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நேற்று 49 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், யாருக்கும் நோய் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.
புதுச்சேரியில் இதுவரை 17 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்துள்ளோம். பல்வேறு தொகுதிகளில் இரண்டாவது முறையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. முகத்திரை அணியாமல் வந்தால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அந்த அபராத தொகையிலிருந்தே அவருக்கு முகத்திரை இலவசமாக வழங்கப்படும்.
மதுபான வழக்கில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை காவல் துறை அலுவலர்கள் சிலர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வெளிமாநிலத்தில் உள்ள புதுச்சேரி மக்களை புதுச்சேரி அழைத்துவருவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் பகுதியில் சிக்கியுள்ள புதுச்சேரி மக்களை அந்த மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிகம் உள்ளதால் , ஊரடங்கு குறித்து முடிவெடுக்க உள்ளோம். வரும் 2ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஊரடங்கு குறித்து தெரிவிக்க உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: உணவின்றி தவிக்கும் கட்டட தொழிலாளர்கள்!