கரோனா தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதை பதிவிறக்கம் செய்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள கரோனா தொற்று நபரின் விவரத்தை உடனடியாக காட்டும். மேலும், கரோனா இருக்கிறதா என்பதையும் அறிகுறிகளை பதிவிட்டு, உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இந்த செயலியை 10 கோடிக்கும் அதிகமானோர் விரைவாக பதிவிறக்கம் செய்தனர்.
இந்நிலையில், ஆரோக்கிய சேது செயலியின் பதிவிறக்கம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 90 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் பல இடங்களில் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் காட்டினால் மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதில் உள்ள சுய படிவத்தை பூர்ச்சி செய்துவிட்டால் கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியாகிவிடும். பலரும் இந்த செயலியை வணிக வளாகங்களுக்கு செல்வதற்காக மட்டுமே உபயோகித்துள்ளனர்.
வணிக வளாகங்கள் முன்பு நின்றுகொண்டு சுய படிவத்தை பூர்த்தி செய்துக்கொண்டு உள்ளே நுழைகின்றனர். இதுமட்டுமின்றி தற்போது நாட்டில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பி வரும் சமயத்தில், ஆரோக்கிய சேது செயலி தேவையில்லாத அச்சத்தை உண்டாக்குவதாக மக்கள் கருதுகின்றனர்.
முதலில், டெல்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய சமயத்தில், கட்டாயமாக இருந்த ஆரோக்கியா சேது செயலி, மக்களின் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து பயணிக்க ஆரோக்கிய சேது செயலி அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் மக்கள் செல்வதற்கு இன்னமும் ஆரோக்கிய சேது செயலி கட்டாயமாக உள்ளது.
தற்போது, நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சமயத்தில், கரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்காணிப்பது பயனுள்ளதா என்ற மிகப்பெரிய கேள்வி அனைவரின் முன்பு உள்ளது.
இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த தீட்சி என்பவர் கூறுகையில், " எனக்கு தெரிந்த பலரும் ஆரோக்கியா சேது செயலியை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். சில நேரங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதாக கருதுகின்றனர்.சரியான வழிகாட்டுதலும் சரியான செய்தியும் இல்லாததால், மக்கள் ஆரேக்கியா சேது செயலியை உபயோகிப்பதிலிருந்து விலக தொடங்கியுள்ளனர்" என்றார்