கடந்த 12ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டது.
காங்கிரஸ் வெளியிட்டிருந்த அந்த வீடியோவில், அரவிந்த கெஜ்ரிவாலை கெஜ்ரி 'வெல்'(Well) எனக் குறிப்பிட்டிருந்தது. அதாவது அரவிந்த் கெஜ்ரிவாலை கிணறு எனக் குறிப்பிடிருந்த அந்தக் காணொலியில், அந்தக் கிணற்றில் இருள் மட்டுமே உள்ளது, வேறெதுவும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும், உங்கள் புத்தியை சரியாக பயன்படுத்தி ஏமாற்றுக்காரர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள் எனக் கெஜ்ரிவாலை கடுமையாக அந்த வீடியோ சாடியிருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் கடிதத்தில், காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோ தங்களது தலைவர் கெஜ்ரிவாலை அவதூறு பரப்பும் வண்ணம் சித்தரித்துள்ளதாகத் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, அந்த வீடியோவுக்கு ஆதாரமாக சிடி-யையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது.
கடந்த வாரம் டெல்லி பாஜகவின் முக்கிய முகமான மனோஜ் திவாரியை ஆம் ஆத்மி தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதாகக் கூறி ஐநூறு கோடி ரூபாய் நஷ்டயீடு கேட்டு, தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்தது. தற்போது அதேவிதமான புகாரை ஆம் ஆத்மி காங்கிரஸ் மீது தெரிவித்திருப்பது டெல்லி தேர்தல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.
இதையும் படிங்க: உறுதியானது ட்ரம்ப்பின் இந்திய வருகை?