தெலங்கானா மாநிலம் விகராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாபிலி பாஸ்கர். இவரும் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவரும் காதலித்துவந்துள்ளனர். இருவரும் தங்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மதத்தைக் காரணம்காட்டி பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு அனுமதியளிக்கவில்லை. காதலுக்காக மதம் மாறிய பாஸ்கர், தனது பெயரை முகமது அப்துல் ஹுனைன் என்றும் மாற்றிக்கொண்டார். மேலும், டெல்லி சென்று பயிற்சியும் எடுத்துள்ளார்.
ஒன்பது மாத கடின பயிற்சிக்கு பின், தந்தூர் இஸ்லாமிய நல்வாழ்வு அமைப்பு மத மாற்றத்துக்கு அடையாளமாக வழங்கிய மத சான்றிதழையும் பெற்றுள்ளார். மத சான்றிதழுடன் நேரடியாக தன் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார் அப்துல்.
தான் இப்போது இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறி மத சான்றிதழையும் காட்டியுள்ளார். ஆனால், பெண் வீட்டாரோ இவர் யார் என்றே தெரியாது என்பதைபோல நடந்துகொண்டனர்.
மேலும், காதலியின் வீட்டிலுள்ளவர்கள் தன்னைத் தாக்கியதாகவும் இவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். காவல் துறையினரும் இவரது புகாரை ஏற்காததால், இவர் தற்போது மனித உரிமை ஆணையத்தின் கதவுகளை தட்டியுள்ளார்.
தனது காதலியை மணக்க மனித உரிமை ஆணையம் உதவ வேண்டும் என்றும் இருவரின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆணையத்தில் புகாரளித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை: சரத் பவார்