போதை மருந்துகள் இந்நாள்களில் வேகமாக பரவிவருகிறது. ஒரு காலத்தில், போதைப்பொருள் விநியோகக்கும் கும்பல்களுக்கு மட்டுமே இந்த நிழல் உலகத்துடன் தொடர்பு இருந்தது.
இப்போது போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள், இந்த நிழல் உலகத்துடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளனர். கிரேட்டர் ஹைதராபாத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பலர், தங்களது போதைப் பொருள் தேவைகளுக்கு டார்க் வெப்பை நாடுகிறார்கள் என்பது சமீபத்தில் தெரியவந்தது.
இது மிகவும் செலவுமிக்க செயல் என்றும், இவ்வளவு பணத்தை செலவழிக்கக் கூடியவர்கள் மட்டுமே அத்தகைய டார்க் வெப் அமைப்பிற்கு செல்ல முடியும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இங்கு போதைப் பொருள்களை விநியோகிக்கும் நைஜீரிய கும்பல்கள், மற்ற நகரங்களுக்கு சென்றதால் சில நுகர்வோர் இப்போது டார்க் வெப்பை நோக்கி திரும்பியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கூரியர் சேவைகள் மூலம் இவை இறக்குமதி செய்யப்படுகிறது
டார்க் வெப் என்பது ஒரு நிழல் உலகம். பொதுவாக கணினிகளைப் பயன்படுத்துபவர்கள் கூகிள் குரோம், மொஸில்லா ஃபயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற உலாவிகள் மூலம் இணையத்தை பயன்படுத்துவார்கள்.
ஆனால் டார்க் வெப் இவற்றிலிருந்து வேறுபட்டது. TOR உலாவிகள் இதுபோன்ற நிழல் உலகில் எளிதில் கிடைக்கின்றன. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்தினால் மட்டுமே, அவற்றைப் பயன்படுத்த முடியும்.
போதைப் பொருள், சட்டவிரோத ஆயுதங்கள், ஆள் கடத்தல் போன்ற பிற நிழல் உலக நடவடிக்கைகள் இவற்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பரிவர்த்தனைகள் போலியான சர்வர்களின் மூலம் நடத்தப்படுகின்றன.
இங்கே அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் பிட்காயின் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக உள்ளூர் நாணயத்திற்கு ஈடாக பிட்காயின்களை ஆன்லைனில் முன்கூட்டியே வாங்க வேண்டும். கடந்த காலங்களில், ஹைதராபாத்தில் போதைப்பொருள் வாங்குபவர்கள் இந்த நிழல் உலகில் அலைந்து திரிகிறார்கள் என்பது கெல்வின் சம்பவத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டோலிவுட் போதைப் பொருள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு முக்கிய நபரை கலால் அமலாக்க குழு விசாரித்தபோது, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. பிட்காயின்கள் வடிவில் பணம் செலுத்துவதன் மூலம் டார்க் வெப்பை பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து போதை மருந்துகள் வாங்கப்பட்டன என்பதும் கண்டறியப்பட்டது.
பார்சல்களில் போதை மாத்திரைகள் தபால் தலை வடிவில் வைக்கப்பட்டிருந்ததால், விமான நிலையங்களில் இருந்த சுங்க அலுவலர்களின் சந்தேக கண்களில் இவை விழவில்லை.
போதைப் பொருள் விற்பவர்களின் நடமாட்டம் கரோனா ஊரடங்கால் பெருமளவில் குறைந்துள்ளதால், போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்கள் நேரடியாக டார்க் வெப்பிலேயே ஆர்டர் செய்வது சமீப நாள்களில் அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் பயணிகள் விமான சேவை குறைக்கப்பட்டு, சரக்கு விமான போக்குவரத்து எவ்வித இடையூறும் இல்லாமல் இயங்கிவருவதால் இந்தப் பாதை தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று சுங்க துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்திய சீன மோதல்: அரிய தாதுக்கள் காரணமா?