வரலாறு படைப்பாரா தேஜஸ்வி யாதவ்?
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அக்டோபர் 28ஆம் தேதி, நவம்பர் மூன்றாம் தேதி, நவம்பர் ஏழாம் தேதி ஆகிய மூன்று நாள்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியே ஆட்சி அமைக்கவுள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் இளம் வயதில் முதலமைச்சராகி தேஜஸ்வி யாதவ் வரலாறு படைப்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இன்று முதல் பட்டாசு வெடிக்க தடை!
நாடு முழுவதும் தீபாவளி நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் வட இந்தியாவில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா பரவிவரும் நிலையில் பட்டாசுகளை வெடித்தால் மேலும் காற்று மாசு அதிகரித்து குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரின் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
இன்று முதல் திரையரங்குகள் திறப்பு!
கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு பிறகும் கூட தமிழ்நாடு அரசு திரையரங்குகள் திறப்புக்கு அனுமதி அளிக்காமல் இருந்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பிறகு நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளித்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன.
ஐபிஎல் இறுதிப் போட்டி: கோப்பையைத் தக்க வைக்குமா மும்பை?
2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஹைதராபாத் அணியை டெல்லி அணி வீழ்த்தியது. இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக டெல்லி அணி முன்னேறியுள்ளது. இதனால் இன்று நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதுகின்றன.
இன்று மற்றொரு ஆப்பிள் நிகழ்வு!
ஆப்பிள் நிறுவனம் 'One more thing' விர்ச்சுவல் நிகழ்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் சிலிகான் மேக் சாதனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.