உலகின் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்.3) திறந்துவைக்கிறார். இமாச்சல் பிரதேசத்தின் மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் விதமாக சுமார் 9.02 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத் திட்டத்தின் மதிப்பு சுமார் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயாகும்.
இந்தச் சுரங்கப்பாதை அமைந்துள்ள பிர் பாஞ்சல் மலைக்குன்றில் 100 மீ. உயரம் கொண்ட புத்தர் சிலை ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி நாளை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் விதமாகவே இந்தப் புதிய புத்தர் சிலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சுரங்கப்பாதை திறப்பு விழாவுக்குப் பின்னர் சிலை நிறுவப்படும் இடத்தை பிரதமர் மோடி பார்வையிடுவார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிகார் தேர்தல் : மகா கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு!