மத்திய அரசு வெளியிட்ட 'ஆரோக்கிய சேது' செயலி மூலம் கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதைத் தரவிறக்கம் செய்வதன் மூலம் பயனாளர்கள், தங்களது அருகில் ஏதேனும் கரோனா பாதித்த மக்கள் உள்ளார்களா என்பதை எளிதில் கண்டறிய முடியும்.
கரோனா தொடர்பாக அமைச்சர்கள் குழு நடத்திய 14ஆவது கூட்டத்தில், ஆரோக்கிய சேது செயலியின் செயல்திறன் குறித்தும், தாக்கம், நன்மைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பிரச்னை குறித்து ஒரு ஹேக்கர் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில், பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், செயலியில் எந்த விதமான பாதுகாப்பு பிரச்னைகளும் இல்லை.
இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், 'தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவிகரமாகவுள்ளது. இதுவரை, ஆரோக்கிய சேது செயலியை 9 கோடி மக்கள் தரவிறக்கம் செய்துள்ளனர்' என்றார்.
இதற்கு முன்னதாக, ஆரோக்கிய சேது செயலியை அரசு, தனியார் ஊழியர்களும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களும் கண்டிப்பாக தரவிறக்கம் செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’ஆரோக்கிய சேது' செயலியை அரசு,தனியார் ஊழியர்கள் தரவிறக்கம் செய்ய உத்தரவு!