மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் கிட்டத்தட்ட பாஜகவின் ஆட்சி மீண்டும் உறுதியாகி விட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சௌகிதார் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். மேலும் அவர், "இந்திய மக்கள் அனைவரும் காவலாளியாக தங்களது கடமையை நிறைவேற்றியுள்ளனர். நாட்டில் உள்ள சாதியப் பாகுபாடு, ஊழல் உள்ளிட்ட தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கான முக்கிய சக்தியாக காவலாளிகள் விளங்குகின்றனர்.
தற்போது நாட்டின் காவலாளியின் வேலையை அடுத்த (சௌகிதார்) கட்டத்திற்கு கொண்டு போக வேண்டிய தருணம். உங்களிடம் எழுந்த இந்த உத்வேகத்தை தொடர்ந்து வைத்திருங்கள். சௌகிதார் என்ற வார்த்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து மட்டுமே எடுக்கப்படுகிறது. ஆனால் தன்னுள் எப்போதும் அது இருக்கும்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.