தெற்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் சுமார் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தினை வழங்குமாறு உள் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது குறித்து பேசிய மாநகராட்சி ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ராம்நிவாஸ் சோலன்கி, "எங்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படாதது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம்.
நேற்று, இந்த விவகாரம் தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் கடிதம் எழுதியுள்ளோம். அதில், இந்தக் கரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்பொருட்டு, மக்களுக்கு நியாயவிலைக் கடை பொருள்கள் விநியோகிப்பது, குடிபெயர் தொழிலாளர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டோம். அதிலும் பலர் 12 மணி நேர பணி அடிப்படையில் வேலை செய்தனர்.
நாடே தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கையில் ஆசிரியர்களாகிய நாங்கள் முன்னின்று பல உதவிகளைகளைச் செய்தோம். இந்தப் பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், களத்தில் நின்று பணியாற்றிய ஆசிரியர்களை மறந்துவிட்டது.
நாங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவ்வித ஊதியமும் பெறாமல் உள்ளோம். இந்த ஜூன் மாதமும் முடியப்போகிறது. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையிலான ஊதியமும் தங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
மருத்துவம், குழந்தைகளுக்கான சலுகைகள் என எதுவும் தங்களுக்கு அளிக்கப்படவில்லை. ஊதியம் வழங்கப்படாததால், பணத்திற்காகப் பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இதனைக் கருத்தில்கொண்டு இன்னும் 15 நாள்களில் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், சலுகைகள், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வழிசெய்ய வேண்டும்" எனக் கூறினார்.