கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக நாட்டில் மார்ச் மாத இறுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகளுக்கான ரயில் சேவையை மத்திய அரசு கடந்த ஜூன் ஒன்றாம் தேதிமுதல் மீண்டும் தொடங்கியது.
மீண்டும் ரயில் சேவை தொடங்கியதையடுத்து பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பயணச்சீட்டு முன்பதிவு செய்துவந்தனர். இந்த நிதியின் மூலம் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் பயணிகளுக்கான சிறப்பு ரயில் சேவைகளின் மூலம் தினந்தோறும் 20 முதல் 22 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக ரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் டி.ஜே. நரேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஜூன் ஒன்றாம் தேதிமுதல் பயணிகளுக்காக இயக்கப்பட்டுவரும் சிறப்பு ரயில் சேவைகளில் 80 விழுக்காடு பயணச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம், பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து மும்பை, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களின் பயணச்சீட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டன.
மேலும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஒரேயொரு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடக அரசிடமிருந்துதான் ரயில்வே துறைக்கு வந்தது. அவர்களின் கோரிக்கைப்படி அந்த ரயில் நேற்று பெங்களூருவிலிருந்து முசாபர்பூருக்குப் புறப்பட்டது.
கர்நாடக அரசைத் தவிர வேறு எந்த மாநில அரசிடமிருந்தும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ரயில்வே துறைக்கு வரவில்லை.
ஒருவேளை அவர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசுகள் முன்வைத்தால் நிச்சயம் ரயில்கள் இயக்கப்படும். இம்மாத தொடக்கத்திலிருந்தே குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் வசதிகளின் கோரிக்கை கணிசமாக குறைந்துள்ளது" என்றார்.
மேலும், வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்துடனும், உள் துறை அமைச்சகத்துடனும் கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என டி.ஜே. நரேன் பதிலளித்தார்.