சீன மக்கள் குடியரசு
ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு என்ற பட்டியலில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. கிழக்காசிய நாடான சீனா, கம்யூனிச ஆட்சியின் கீழ் சீன மக்கள் குடியரசாக (People’s Liberation Army) உருவெடுத்து 70 ஆண்டுகளை முழுமையாக கடந்துவிட்டது.
ஹைபர்சோனிக் ஏவுகணை
அதில், ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தில் (Hypersonic Technology) உருவாக்கப்பட்டுள்ள டி.எஃப்-41 (DF-41), டி.எஃப் 17 (DF-17) ரக ஏவுகணைகளும் அடங்கும். இவைகள் அதிபயங்கர ஆற்றல் மிக்கவை. 15 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக பறக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணைகளைக் கொண்டு அமெரிக்காவைக்கூட வெறும் 30 நிமிடத்தில் சீனாவால் தாக்க முடியும்.
டி.எஃப்-17 ரக ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியது. இதனை சுட்டு வீழ்த்துவதும் கடினம். அமெரிக்கப் பணியாளர்களின் துணைத் தலைவர் ஜான் ஹைதான் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த ஆயுதங்கள் தங்களுக்கு எதிராக திரும்பினால், தடுக்க தங்களிடம் எதுவும் இல்லை என்பதே அவர் கூற்று.
2035ஆம் ஆண்டு இலக்கு
ஆம்! அந்த அணிவகுப்பில் சில பெயர் அறியாத அதிதொழில்நுட்ப ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில் ஒன்று கோன்ஜில்-11 (Gongji-11 aerial vehicle) ரக ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை ரேடாரால் (Radars) கண்டறிய இயலாது. எதிரியின் அருகில் சென்று, இலக்கை சரியாக குறி பார்த்து தாக்கலாம். இதுமட்டுமின்றி மேக்4 ரக போர் விமானங்களுக்கு நிகரான வேகத்தில் பறக்கும் ஆளில்லா குட்டி விமானங்களும் (ட்ரோன்) சீனர்களிடம் உள்ளது.
அதிபர் அறிவிப்பு
இது நேற்று முடிவெடுத்து இன்று செயல்படுத்தப்படவில்லை. 2015ஆம் ஆண்டு நவம்பரில் அதிபர் ஷி ஜின்பிங், ராணுவ சீர்திருத்தத்தை அறிவித்தார். அதன் நீட்சியாக அடுத்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியானது. ஊழியர்கள் மூன்று லட்சமாக குறைக்கப்பட்டனர்.
அப்போது சில உள் எதிர்ப்புகள் இருந்தன. எனினும் ஏழாக இருந்த ராணுவப் பகுதிகள் ஐந்தாக மாற்றப்பட்டன. இது 2016, பிப்ரவரியில் நிகழ்ந்தது. தொடர்ந்து பொதுத் துறை நிறுவனம் ராணுவம் வசமானது. அவைகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் செயல்படத் தொடங்கின. ராணுவ உயர் அலுவலர்கள் 15 பேர் இத்துறைகளை கட்டுப்படுத்துகின்றனர்.
வான்வழி, சைபர் (இணையதள) குற்றங்கள், மின்னணு (எலெக்ட்ரானிக்) ஆகிய தாக்குதலை தடுத்து, ராணுவத்தை அடுத்தகட்ட நவீன யுகத்துக்கு எடுத்துச் செல்வதற்கான தொடக்கப் புள்ளியாக இது கருதப்படுகிறது.
இருப்பினும் நவீன போர்க்கருவிகள், போர்நுட்பக் கலைகளை பயன்படுத்தி போரிடும் அளவிற்கு சீன வீரர்களுக்கு போதிய முன் அனுபவம் இல்லை. இது ஒருவகையான 'அமைதி நோய்' (peace disease) என்கிறார் அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங். அதனை நீக்கவும் அவர் துணிந்துவிட்டார். கடந்த ஆண்டு சீன மக்கள் குடியரசின் ராணுவ மதிப்பாய்வு அறிக்கை வெளியானது. அதில் சர்வதேச நாட்டுடன் கூட்டுப்பயிற்சி திட்டம் ஒன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், ராணுவத்தோடு இணைப்பு
இது சீன ராணுவத்தை நவீனமயமாக்க நிச்சயம் உதவும். ஏனெனில் சீனா தனது பலவீனத்தை ஒப்புக் கொள்கிறது. மேலும் அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்கிறது. சீனாவின் பாதுகாப்புத் துறை வளர்ச்சியை பார்த்தோமானால் அது மிக சுவாரஸ்யமானது. ஒவ்வொரு ஆண்டும், 'உலகின் அதிநவீன 100 பாதுகாப்புக் கருவிகள்' என்ற தலைப்பில் பிரபல நாளிதழ் உலக நாடுகளின் ராணுவ பலத்தை பட்டியலிடும். அதில், ஒரு பாதுகாப்புக் கருவி கூட சீனாவிடம் இல்லை. இது கடந்த ஆண்டு நிலவரம்.
மேலும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஆராய்ச்சிக்காக சிங்குவா பல்கலைக்கழகம் ராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தோடு கூட்டு சேர்ந்துள்ளது. சீனாவில் எழுச்சி, அதன் இலக்கு ஆகியவற்றை வரையறுக்க முடியாது. ஆனால் இரண்டு விஷயத்தை உறுதியாகக் கூற இயலும். ஒன்று அமெரிக்காவுடன் நேரடி போட்டி. இக்கருத்துக்கு உரம் சேர்க்கும் விதமாக பேசிய அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்டு, ”2025ஆம் ஆண்டுக்குள் சீனா அமெரிக்காவுக்கு போட்டியாக இருக்கும்” என்கிறார்.
அமெரிக்காவின் தலைவர்கள் பலரும் இதனை சுட்டிக் காட்டுகின்றனர். அப்போது, இந்தியா போன்ற நாடுகள் யார் பக்கம் நிற்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்படலாம் என்பதும் அவர்களின் கருத்து. எழுத்தாளர் ஜான் ஜெ மெர்சீய்மர் (John J. Mearsheimer), தி டிராஜிடி ஆஃப் கிரேட் பவர் பாலிடிக்ஸ் (The Tragedy of Great Power Politics) என்ற தனது நூலில் தாக்குதல் யதார்த்தவாதம், சீனாவின் அமைதி குறித்தும் இவ்வாறு கூறுகிறார்...
இந்தியாவுக்கு அச்சுறுத்தல்
”பொருளாதார ரீதியாக சீனா வளர்ச்சி அடைந்தால், மேற்கில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவது போல், ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முயலும். இவ்வாறான பிராந்திய மேலாதிக்கத்தை சீனா பெறுவதை தடுக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவிற்கு செல்லும். பெய்ஜிங்கின் (சீன தலைநகர்) அண்டை வீடான இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து சீன ஆதிக்கத்தை எதிர்கொள்ளும். இதன் முடிவு போருக்கு இணையான பாதுகாப்பு தேவைப்படும். சுருக்கமாகச் சொல்லப்போனால் சீனாவின் வளர்ச்சி ஆசிய பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும்”