உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூரில் ரோடா கிராமத்தில் வசிக்கும் அமர்(65). இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் மகனை கடந்த வாரம் அதே கிராமத்தை சேர்ந்த சோனு யாதவ் என்பவர் கோடாரியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
பின்னர், அமர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய சோனு வலுக்கட்டாயமாக புகாரை வாபஸ் பெற வைத்துள்ளார்.
இந்நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் தன் மீது புகாரளித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத சோனு, அமரை அடித்து துன்புறுத்தியது மட்டுமின்றி சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிர்சா மன்சார் பேக் கூறுகையில், "இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தொடர்புடைய பலரை தேடிவருகிறோம். புகார் கிடைத்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கொடுமைப்படுத்துதல்களை காவல் துறை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது" என்றார்.