மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், மின்சார வாகன உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியானது 12 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக நிதி ஆயோக் முதன்மை செயலர் அமிதாப் கன்ட் கூறுகையில், ”மின்சார பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், நாட்டில் உள்ள 65 நகரங்களில் 5,645 மின்சார பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆட்டோ மொபைல் துறையில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் வாகன புகை இல்லாத நாடாக மாற உதவும். வருகின்ற 2025ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை 72 விழுக்காடு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.