ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியபோது, அம்மாநில மக்களுக்கான அலைபேசி, தொலைபேசி, இணையதளம் ஆகிய சேவைகள் முழுவதும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின் ஜம்மு - காஷ்மீரின் இரு மாவட்டங்களுக்கு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் வழங்க யூனியன் பிரதேச முதன்மை செயலாளர் ஷலீன் கப்ரா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில், '' ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர், கந்தர்பல் ஆகிய மாவட்டங்களுக்கு சோதனை அடிப்படையில் அதிவேக 4ஜி சேவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களுக்கு வழக்கம்போல் 2ஜி இணையதள சேவையே தொடரும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்மாநில மக்களுக்கு நிலையான தொலைத்தொடர்பு சேவை, இணையதள சேவை ஆகியவை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி மேக் - பைண்டிங் மூலம் தொடர்ந்து கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் செப்.8ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது.
சில நாள்களுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரின் சில பகுதிகளுக்கு 4ஜி இணையதள சேவையை எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைக்காமல் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: 'சிறப்புச் சட்ட நீக்கத்திற்குப் பின் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு; இதுதான் பொருளாதார முன்னேற்றமா?'