கரோனா வைரஸ் நோய் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏழை, எளியோர், பணக்காரர் என பல்வேறு தரப்பினர் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவருகிறது. இந்நிலையில், கரோனா காரணமாக ஆரம்ப கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், அதன்விளைவாக 40 மில்லியன் குழந்தைகள் தவித்துவருகின்றனர் என யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
யுனிசெப் ஆராய்ச்சி அலுவலகம் தயாரிப்பில் வெளியாகியுள்ள இன்னசென்டி என்ற ஆராய்ச்சி புத்தகத்தில், குழந்தைகள் நலன், உலகளவில் ஆரம்ப கல்வி எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹேன்ரிட்டா ஃபோர் கூறுகையில், "கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய இடையூறு காரணமாக சிறப்பாக தொடங்கப்பட வேண்டிய குழந்தைகளின் ஆரம்ப கல்வி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்பு, ஆரமப் கல்வி ஆகியவை குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. பெருந்தொற்று இந்த அடிப்படை கட்டமைப்பை அச்சுறுத்திவருகிறது" என்றார்.
குழந்தை வளர்ப்புக்காக செலவிடும் பணம் இல்லாமல் பல பெற்றோர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு ஊரடங்கே காரணம். இதனால், சராசரியை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை ஆண்களை விட பெண்கள் குழந்தைகளின் பராமரிப்புக்காக செலவிடுகின்றனர்.
பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில், ஏற்கனவே சமூக பாதுகாப்பு சேவை இல்லாமல் சிறிய குழந்தைகளை உடைய குடும்பங்கள் தவித்துவருகின்றன. தற்போது ஆரம்ப கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்திற்கு முன்பாகவே, ஆரம்ப கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் பணம் கேட்டதால் பெற்றோர்கள் அதில் சேர்க்க முடியாமல் தவித்தனர்.
தரம் குறைவான கல்வி நிலையங்கள் காரணமாக பாதுகாப்பற்ற இடங்களில் குழந்தைகள் வளர்ந்துவருகின்றனர். 5 வயதுக்கு கீழான 35 மில்லியன் குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் வளர்க்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 166 நாடுகளில், 50 விழுக்காடு நாடுகள் இலவச ஆரம்ப கல்வியை வழங்கிவருகிறது. இது தற்போது, 15 விழுக்காடு குறைந்துள்ளது எனவும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆக்ஸிஜன் அளவை கணக்கிடுவது உயிர்களை காக்கும்!