காங்கிரஸ் மூத்தத் தலைவராக திகழ்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் தொகுதி உள்பட 22 தொகுதிகள் காலியானது. ஏற்கனவே மாநிலத்தில் இரு தொகுதிகள் காலியாக உள்ளது.
இந்த 24 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
இந்நிலையில் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிசி சர்மா கூறுகையில், “அவர் (பிரசாந்த் கிஷோர்) எங்களின் வெற்றிக்கு உதவுவார். அவரின் கணக்கெடுப்புகள் வாயிலாக சமூக ஓட்டத்தை அறிந்துகொள்ள முடியும். நாங்கள் விரைவில் அவரிடம் பேசுவோம்” என்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜகவின் மூத்தத் தலைவரும், எம்.எல்.ஏ.ருமான ராமேஸ்வர் சர்மா, "கிஷோர் என்ன செய்வார்? காங்கிரஸ் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் தவறான வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆகவே இடைத்தேர்தலில் பாஜக 24 தொகுதிகளிலும் வெல்லப் போகிறது” என்றார்.
மாநிலத்தின் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் தற்போதைய பலம் 206 ஆக குறைந்துள்ளது. இதில் பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. காங்கிரசில் 92 உறுப்பினர்கள் உள்ளனர். அதே நேரத்தில் நான்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவும் காங்கிரசுக்கு உள்ளது.