கடந்த 2015ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது, அரசுப் பணிகளில் சேர்வதற்கான நேர்காணலை ரத்து செய்துவிட்டு அதற்கு பதில் எழுத்துத் தேர்வை நடத்தலாம் என பிரதமர் மோடி ஆலோசனை கூறினார். நேர்காணலால் அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பவரின் குடும்பத்தார் அச்சப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, 23 மாநிலங்களும் எட்டு யூனியன் பிரதேசங்களும் அரசுப் பணிகளுக்கான நேர்காணலை ரத்து செய்தன.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "கடந்த 2016ஆம் ஆண்டு, மத்திய அரசு குரூப் பி, குரூப் சி பணிகளுக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, மூன்றே மாதங்களில் பல முயற்சிகளை மேற்கொண்டதன் மூலம், மத்திய அரசுப் பணிகளுக்கான நேர்காணலை, பணியாளர்கள் மற்றும் பயற்சிக்கான துறை ரத்து செய்தது.
இதனை, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் உடனடியாக அமல்படுத்தின. இருப்பினும், பிரதமரின் ஆலோசனையை சில மாநிலங்கள் ஏற்காமல் இருந்து வந்தன. சில மாநிலங்களுக்கு பல முறை அறிவுறுத்தினோம். நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர், லடாக் உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்களும், 23 மாநிலங்களும் நேர்காணலை ரத்து செய்துள்ளன" என்றார்.