குஜராத் மாநில முதலமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருந்தபோது, 2002ஆம் ஆண்டு பெரும் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் சிறுபான்மை மக்கள் அதிகம்.
இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதி (ஒய்வு) ஜி.டி. நானாவதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவில் உயர் நீதிமன்ற நீதிபதி (ஒய்வு) அக்ஷய் மேக்தா உள்ளிட்டோரும் இருந்தனர்.
இந்தக் குழு 2014ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் இருந்தபோது, விசாரணை அறிக்கையை வழங்கியது. இந்த அறிக்கை ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் குஜராத் சட்டப்பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையை மாநில காவல் துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா சமர்ப்பித்தார். அறிக்கையானது ஒன்பது தொகுதிகளைக் கொண்டுள்ளது. மொத்தம் ஆயிரத்து 500 பக்கங்கள் உள்ளன.
இந்த அறிக்கையில், அப்போதைய முதலமைச்சரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "பெரிய அளவில் கலவரம் நடந்தது, சில இடங்களில் காவலர்களால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காவலர்களுக்கு போதிய ஆயுதங்கள் இல்லை. இதனால் கலவரக்காரர்களைக் காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல்போனது. காவலர்களின் முயற்சி பயனற்றுப் போய்விட்டது” எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு கரசேவர்கள் பயணித்த ரயில் கோத்ரா ரயில் நிலையம் அருகே நின்றது. அப்போது அந்த ரயிலிலுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்தனர். இதில் கரசேவர்கள் 59 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அதற்கு பின்னர் குஜராத்தில் இருதரப்பினரிடையே கலவரம் மூண்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: 1984 சீக்கிய கலவரம்: மவுனம் கலைத்தார் மன்மோகன் சிங்!