டெல்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் தனியார் ஆய்வகம் ஒன்றில் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிவரும் அவரது தந்தையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் இருவரும் கடந்த மாதம் ஆறாம் தேதி சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் இருவரும் தொற்றிலிருந்து குணமடைந்து கடந்த மாதம் 13ஆம் தேதி வீட்டிற்கு திரும்பினர்.
இந்நிலையில், பூரண குணமடைந்த அந்த இளைஞர் தன்னைப் போல் பிறரும் விரைவில் கரோனா தொற்றிலிருந்து மீண்டுவர எண்ணி, எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது பிளாஸ்மாக்களை தானமாக அளிக்க முன்வந்துள்ளார். இதையடுத்து அவர், இந்தியாவிலேயே இளம் வயது பிளாஸ்மா கொடையாளராக உள்ளார் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயம் சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் அம்ரீந்தர் சிங் மல்ஹி தெரிவித்துள்ளார்.