கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், வேறு மாநிலங்களில் பணிபுரிந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அவர்களில் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து, வேறு வழியின்றி சொந்த ஊருக்கு நடைபயணமாகச் செல்லத் தொடங்கினர். இன்னும் சிலர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர். அந்த வகையில், காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் ஏற்றி 1,300 கி.மீ. தூரம் கடந்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற சிறுமியின் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்துள்ளது.
பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் சிர்ஹூலி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவருக்கு ஜோதி என்ற 13 வயது மகள் உள்ளார். பிழைப்புக்காக ஹரியானா மாநிலத்திற்குச் சென்று ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இச்சூழலில் பாஸ்வான் ஜனவரி மாதம் விபத்துள்ளானார். அதனால் அவரால் நடக்க முடியவில்லை. மேலும் அவரது வருமானம் தடைபட்டு, அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனிடையே மத்திய அரசு கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது.
இதனால் வீடு வாடகை கட்ட முடியாத அவலநிலைக்கு பாஸ்வான் தள்ளப்பட்டார். நெருக்கடியான இம்மாதிரியான சூழலிலும், வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என வீட்டு உரிமையாளர் சிறிதும் இரக்கமின்றி கூறியுள்ளார்.
செலவுக்கு 500 ரூபாய் மட்டும் இருக்க, அதனைக் கொண்டு ரேஷன் பொருள்கள் வாங்குமாறு பாஸ்வான் கூறியுள்ளார். ஆனால் அவரது மகள் ஜோதியோ, அவரை பிகாரில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதன்படி, தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு மிதிவண்டி ஒன்றை வாங்கியுள்ளார். அதன்பின், தனது தந்தையை சைக்கிளின் பின் இருக்கையில் அமர்த்தி, பிகார் நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.
மே 9ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய அவர் பல இடர்பாடுகளைத் தாண்டி, 1,300 கி.மீ. பெருந்தூரத்தைக் கடந்து மே 17ஆம் தேதி சொந்த ஊருக்குச் சென்றார். சிறுமியின் இச்செயலைக் கண்டு, சொந்த ஊர் மக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து மோகன் பாஸ்வான் பேசுகையில், ''1,300 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்ய முடியாது என எனது மகளிடம் கூறினேன். அவரின் மன உறுதியால் இந்தப் பயணம் சாத்தியமாகியுள்ளது. எட்டு நாள்களில் 1,300 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்துள்ளோம்'' என்றார்.
தொடர்ந்து சிறுமி ஜோதியிடம் பேசுகையில், ''எங்களிடம் இருந்த பணம் முழுவதும் காலியாகிவிட்டது. இந்த நேரத்தில் எங்கள் கைகளில் பணமுமில்லை. வீட்டு ஓனரும் வீட்டைவிட்டு காலி செய்யச் சொல்லிவிட்டார். அதனால் எஙகளுக்கு வேறு வழியில்லை. எங்களால் 1,300 கி.மீ. பயணம் செய்ய முடியவில்லை என்றால், நாங்கள் பசியால் செத்துருப்போம்'' என்றார். சொந்த ஊர் திரும்பிய சிறுமியும், அப்பாவும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு பிஸ்கெட்தான்: 130 கி.மீ. நடந்துவந்த குடிபெயர்ந்தோருக்கு உணவளித்த டிசிபி!