டெல்லியின் பஞ்சிம் விஹார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 12 வயது சிறுமி தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அருகில் வசிப்பவர்கள் அந்த சிறுமியின் பெற்றோருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த சிறுமியை மீட்டு முதற்கட்ட சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது, '' செவ்வாய்க் கிழமை (ஆக.4) பஞ்சிம் விஹார் காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்றோம். இப்போது அந்த சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். மிகவும் கூர்மையான ஆயுதத்தை வைத்து சிறுமியின் மீது சிலமுறை தாக்கியுள்ளனர். சிறுமியின் முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அருகில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவமனையில் அந்த சிறுமியின் நிலை மோசமாக தான் உள்ளது'' என தெரிவித்தனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மகளிர் ஆணையம் தரப்பில் கூறியதாவது, ''அந்த சிறுமி மிகவும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் சிறுமியை கொலை செய்ய முயன்றுள்ளனர். இப்போது அந்த சிறுமி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார்'' என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடு புகுந்து மூதாட்டியிடம் பாலியல் வன்புணர்வு... மூவர் கைது!