இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மார்ச் மாத இறுதியில் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மசூதி ஒன்றில் மறைந்திருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உள்ளிட்ட 12 பேரை காவல் துறையினர் கண்டுபிடித்தனர், அவர்களுக்கு கோவிட்-19 தொற்று உள்ளதா என்பது குறித்துக் கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பரேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தார். மற்றவர்கள் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 28 நாள்கள் தனிமைப்படுத்துதல் நிறைவடைந்ததையடுத்து, வியாழக்கிழமை அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்திலுள்ள சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களது பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மாநகர காவல் துறை கண்காணிப்பாளர் தினேஷ் திரிபாதி கூறினார்.
இதையும் படிங்க: வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க உ.பி. அரசு நடவடிக்கை!