சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டத்தில் கேரேகன் பகுதியில் விஷம் கலந்த தண்ணீரை குடித்து 12 மான்கள் பரிதாபமாக சனிக்கிழமை உயிரிழந்தன. இப்பகுதியில் உள்ள மொகாலை வனப்பகுதியில் உள்ள புல்வெளி பகுதிகளில் தேங்கி இருந்த மழைநீரில் வேட்டைக்காரர்கள் விஷம் வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியிலிருந்த கிராமத்தினர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் உயிரிழந்த மான்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும், அங்கிருந்த தண்ணீரை சோதனைக்கு எடுத்துச்சென்றனர். இது குறித்து வனத் துறையினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தாம்தரி மாவட்டத்தில் மான்களின் தோல், கொம்புகளுக்காக இதுபோன்ற சம்பவம் பலமுறை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கான கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.