நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றான டெல்லியில், பாதிக்கபட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சத்தர்பூர் பகுதியில் 10 ஆயிரம் படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை தான் இந்தியாவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கரோனா பரிசோதனை மையம் ஆகும். இந்த மையத்திற்கு சர்தார் படேல் கரோனா பராமரிப்பு மையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் அனைத்துப் பணிகளும் இந்தோ - திபேத்திய எல்லைக் காவல் துறையினரால் துல்லியமாக முடிவடைந்து திறப்பதற்கு தயார் நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று சர்தார் படேல் கரோனா பராமரிப்பு மையத்தை டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் திறந்து வைத்தார். இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், முதல் நபராக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனில் பைஜால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு தான் சர்தார் பட்டேல் சிறப்பு மருத்துவ மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தமுள்ள படுக்கைகளில் 10 சதவிகிதம் படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி கொண்டவை. கரோனா நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆகாமல் பார்த்துக் கொள்வதற்காக ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் உள்ளனர். இது மட்டுமின்றி கேரம் போர்டு, பேட்மிண்டன் போன்ற விளையாட்டு வசதிகளும் இன்கு தயார் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையில் 75 ஆம்புலன்ஸ்களும், இந்தோ - திபேத்திய எல்லைக் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இம்மருத்துவமனையை வெறும் 12 நாட்களுக்குள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.