பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பதைத் தொடர்ந்து இந்திய அரசு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு, அங்கிருந்து இந்தியா திரும்பியவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பிரிட்டனிலிருந்து கர்நாடக மாநிலத்திற்குத் திரும்பிய பயணிகளில் பத்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மாதிரிகள் அனைத்தும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளுக்கு இரண்டு முதல் மூன்று நாள்கள் தேவைப்படும். அந்த முடிவுகள் வெளியான பிறகே, அவை உருமாறிய வைரசா எனக் கண்டறிய முடியும்.
மேலும், தொற்று உறுதிசெய்யப்பட்டால், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநிலத்தில் தற்போது 97.5 விழுக்காட்டினர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விகிதம்1.22 விழுக்காடாகவும் குறைந்துள்ளது.
இதுவரை ஏர் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களின் வழியே நவம்பர் 25 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை சுமார் 2,500 பேர் மாநிலத்திற்குத் திரும்பியுள்ளனர். அவர்களின் உடல்நிலையைக் கண்டறிந்து கண்காணிக்கவும், அவர்களைப் பரிசோதனைகளுக்குள்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணமாகவும், கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கிலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிரட்டும் புது கரோனா... திணறும் பிரிட்டன்: ஒரேநாளில் 744 பேர் மரணம்