ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை தொடங்கியுள்ளது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி பெற்றப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்தப் பரிசோதனை தொடங்கியது.
இந்த சோதனை நாடு முழுவதும் நான்கு இடங்களில் நடத்தப்படவுள்ள நிலையில், மெடிரினா மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர் வசந்த் கலத்கர் மேற்பார்வையில் இச்சோதனை நடத்தப்பட்டது.
சோதனை நடத்தப்பட்ட பிறகு, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து ரத்த மாதிரிகள் சேமிக்கப்பட்டன. 50 தன்னார்வலர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இந்த மாதிரிகளில் சோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ரத்த பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றப் பிறகு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் குழந்தைகளுக்கு ஆண்டிபாடி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசி சோதனை மூன்று கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். அடுத்து, 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடலில் நல்ல முன்னேற்றம் காணும் குழந்தைகளுக்கு 28 நாள்களுக்குப் பின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.
இதையும் படிங்க: 'தடுப்பூசி பெற விரைவில் மறு டெண்டர்' அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!