டெல்லி: நாடு முழுக்க சில இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசு கெண்டுவந்துள்ள மூன்று விவசாய பண்ணைச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நூறு நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன் நீட்சியாக வெள்ளிக்கிழமை பாரத் பந்த் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையடுத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாட்டில் ஆங்காங்கே கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் பாதிக்கப்படலாம். பாரத் பந்த் குறித்து விவசாய ஒருங்கிணைப்பு சங்கமான சம்யுக்தா கிஷான் மோர்சா தலைவர்கள் கூறுகையில், “நாடு தழுவிய பணிநிறுத்தம் மார்ச் 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி, நாடு முழுவதும் மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இது டெல்லியின் மூன்று எல்லைகளான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய இடங்களில் நான்கு மாதங்களாக நடக்கும் உழவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் பால், காய்கறி உள்ளிட்ட விநியோகங்கள் நிறுத்தப்படும். நாம் நமது எதிர்ப்பை அமைதியான முறையில் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். ஆகவே விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். எவ்வித சட்டவிரோத மற்றும் மோதல்களில் ஈடுபட வேண்டாம்.
அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும். சிறிய மற்றும் பெரிய சாலைகள் மற்றும் ரயில்கள் அனைத்தும் தடைசெய்யப்படும். ஆம்புலன்ஸ் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும். எங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், மற்றும் போக்குவரத்து மற்றும் பிற சங்கங்கள் ஆதரவளித்துள்ளன. மேலும், விவசாயிகள் பல்வேறு இடங்களில் ரயிலை மறிப்பார்கள்.
மூன்று பண்ணை சட்டங்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். எங்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுவே எங்களின் பிரதான கோரிக்கை” என்றனர். எனினும், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இந்த பாரத் பந்த் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
ஆகையில் அச்சங்கம் சார்ந்த கடைகள், வணிக வளாகங்கள் திறந்திருக்கும். இதற்கிடையில், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் மூத்த உறுப்பினரும் உழவர் தலைவர் அபிமன்யு கோஹர் கூறுகையில், “ஹரியானா மற்றும் பஞ்சாபில் “பாரத் பந்த்” தாக்கம் பெரிய அளவில் உணரப்படும்” என்றார். மேலும், “மூன்று புதிய வேளாண் சட்டங்களும் மறைமுகமாக அனைவரையும் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தின்போது தங்கள் கடைகளை மூடுமாறு வர்த்தகர் சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றும் கோஹர் கூறினார்.
இருப்பினும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.