பெங்களூரு (கர்நாடகா): பெங்களூருவின் தென்கிழக்கு பிரிவு இணைய பணப்பரிவர்த்தனை மற்றும் போதைப்பொருள் (CEN) காவல் துறையினர், ஹெச்எஸ்ஆர் லே அவுட்டில் உள்ள தங்கும் விடுதியில் இருந்த, புதுச்சேரியைச் சேர்ந்த நிரஞ்சன் குமார் என்பவரை நேற்று (டிச.9) கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நிரஞ்சன் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
என்ன செய்தார் நிரஞ்சன் குமார்? பெங்களூருவில் உள்ள ஹெச்எஸ்ஆர் லே அவுட்டில் இருக்கும் ஆண்கள் தங்கும் விடுதியில் நிரஞ்சன் குமார் வசித்து வந்தார். வேலைக்கு செல்லாத இவர், தனது தாய் அனுப்பும் பணத்தை வைத்து போதைக்கு அடிமையாகி உள்ளார்.
இதனிடையே இவர் தங்கியிருக்கும் விடுதிக்கு அருகே, பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த இரு விடுதிக்கும் ஒரே உரிமையாளர் தான். இந்த நிலையில் விடுதி உரிமையாளருக்கும், நிரஞ்சன் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் விடுதியில் ஏதேனும் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால், அதனை சரிசெய்ய நிரஞ்சனை பெண்கள் தங்கும் விடுதிக்குள் அனுமதித்துள்ளார், விடுதி உரிமையாளர். இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்த நிரஞ்சன் குமார், பல தில்லாலங்கடி வேலைகளை செய்யத் தொடங்கி உள்ளார்.
வீடியோ எடுத்தது எப்படி? அங்கு தங்கி இருக்கும் பெண்கள் குளிக்கச் செல்லும் நேரம், இடம் மற்றும் குளியலறையின் அமைப்பு ஆகியவற்றைக் கவனித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், பெண்கள் விடுதியில் இருக்கும் பைப்லைன் வழியாக ஏறிச் செல்லும் நிரஞ்சன் குமார், அங்கிருந்து பெண்கள் நிர்வாணமாக குளிப்பதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதனை வாடிக்கையாக வைத்த நிரஞ்சன், அதனை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்புவது குறித்து இணையத்தில் தேடி உள்ளார்.
வெளிநாடு எண் வழியாக வந்த நிரஞ்சன்: முதலில் இளம்பெண்களின் மொபைல் எண்களை விடுதியின் வருகைப் பதிவேட்டில் இருந்து எடுத்துள்ளார். பின்னர் வெளிநாட்டு மொபைல் எண்களை இணைய மோசடியில் பயன்படுத்திய நிரஞ்சன் குமார், அந்த மொபைல் எண்கள் வழியாக சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நிர்வாண குளியல் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
அப்போது தனது ஆசைக்கு இணங்காவிட்டால், வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவேன் எனவும் மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தென்கிழக்கு பிரிவு இணைய பணப்பரிவர்த்தனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இளம்பெண்ணாக மாறிய காவல் துறை: பின்னர் பாதிக்கப்பட்ட இளம் பெண் என்ற பெயரில் நிரஞ்சன் குமாருடன் பேசிய காவல் துறையினர், ஒரு ஹோட்டலுக்கு நிரஞ்சனை வரவழைத்துள்ளனர். இதனை நம்பி ஹோட்டலுக்குச் சென்ற நிரஞ்சன் குமாரை இன்ஸ்பெக்டர் யோகேஷ் தலைமையிலான காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமி உட்பட இரு பெண்களை சீரழித்த காமுகர்கள் கைது!