பெங்களூரூ: கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரில் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை ஒரே இமெயில் மூலம் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் அவசர அவசரமாக வெளியே அனுப்பப்பட்டனர்.
வழக்கம் போல் இன்று (நவ.30) காலை பள்ளிகள் இயங்க தொடங்கிய நிலையில் காலை 8 மணி அளவில் பிரபலமான 15 தனியார் பள்ளிகளின் இமெயிலுக்கு “பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என்கிற மெயில் வந்துள்ளது. இதனை கண்ட பள்ளி நிர்வாகம் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கிய நிலையில், அச்சமடைந்த பள்ளி நிர்வாகம் அனைவரையும் அவசர அவசரமாக திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 15 பள்ளிகளுக்கு விரைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், பள்ளிகளில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை எனவும் மேலும், இது போலியான மிரட்டல் என போலீஸ் தரப்பு தெரிவித்தனர். இந்நிலையில் போலி இமெயில் அனுப்பியது யார், என்பதை விசாரிக்க சிஐடி அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், “இந்த செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது தான் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், வெடிகுண்டு மிரட்டலுக்கான காரணம் அந்த நபர் பிடிபட்ட பிறகே தெரியவரும் என மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் 2ம் ஆண்டு தமிழ் புத்தகத் திருவிழா..! டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது!