கொல்கத்தா: கடந்த 2016ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததால் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில், 2014 முதல் 2021ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியிடம் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை நடத்தியது. பார்த்தா சாட்டர்ஜி தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று (ஜூலை 22) பார்த்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 26 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இன்று காலை சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். சட்டர்ஜியின் தோழியான அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரது வீட்டிலிருந்து சுமார் 21 கோடி ரூபாய் ரொக்கத்தையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் சட்டர்ஜி கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் சட்டர்ஜி கைது தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் ஊழலில் மூழ்கியுள்ளது என்பதையே இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது என்றும் பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சபாநாயகர் பீமன் பானர்ஜி கூறுகையில், "சிபிஐ அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள், எம்பி அல்லது எம்எல்ஏக்களை கைது செய்யும்போது, சபாநாயகரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் சட்டர்ஜியின் கைது குறித்து அமலாக்கத்துறையிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை" என்று என்று கூறினார்.
இதையும் படிங்க:எடியூரப்பா குற்றவியல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்!