டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி பார் கவுன்சில் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது நாடு தழுவிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது.
இந்நிலையில், டெல்லி பார் கவுன்சில் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “விவசாயிகளுக்கு ஆதரவாக பயிர்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை அளிக்கும் வகையில் புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராடிவருகின்றனர். ஆக, இந்தச் சட்டத்தில் பல்வேறு ஐயப்பாடுகள் எழுகின்றன. டெல்லி பார் கவுன்சில் இந்தச் சட்டங்களை கண்டிக்கிறது. இந்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார் மோடி