பத்தினத்திட்டா (கேரளா): கேரள மாநிலத்திலுள்ள பத்தினத்திட்டா என்ற பகுதியில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயில் ஒவ்வொரு மாதங்களிலும் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் திறக்கப்படும். மேலும், கார்த்திகை மாதங்களில் இருமுடி கட்டி இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக இலங்கை மற்றும் மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
சபரிமலை ஐயப்பன் கோயில் கார்த்திகை முதல் நாள் முதல் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் நடைபெறும். இதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இணையதளம் மூலமாகப் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
இணையதளம் மூலம் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்காகக் கோயில் அடிவாரத்திலுள்ள நிலக்கல் மற்றும் பம்பை பகுதியில் உடனடி முன்பதிவு வசதிகள் கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக அடிப்படை வசதிகளைத் தெரிந்து கொள்வதற்காக புது மெபைல் செயலியைக் கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலிக்கு அய்யன் (Ayyan) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த செயலியைப் பெறக் கோயில் வரும் பல்வேறு பகுதிகளில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான க்யூ ஆர் கோர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பக்தர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த செயலியை Play Store மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலி மூலம் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, தங்கும் இடம் மற்றும் அவசரகால மருத்துவ வசதிகளையும் மேலும் வனப்பகுதியில் செல்லும் போது விலங்குகள் நடமாட்டத்தைக் கண்டு அறிவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர் எளிதாக அனைத்து வசதிகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!