மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விரார் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்த 35 வயதான பெண், வங்கியில் கொள்ளையடிக்க வந்த நபர்களால், கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொள்ளை சம்பவத்தில் வங்கியின் முன்னாள் ஊழியர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தக் கொள்ளை சம்பவம் நேற்றிரவு (ஜூலை.29) 8 மணியளவில் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட வங்கி மேலாளர் யோகிதா வர்தக் (35), வங்கி காசாளர் ஷ்ரதா தேவ்ருகர் (32) ஆகியோர் வங்கி நேரம் முடிந்ததால், கதவுகளை மூடிக்கொண்டிருந்தனர். அப்போது, மாஸ்க் அணிந்து வந்த முன்னாள் ஊழியர் அனில் துபே(35), கத்தியை காட்டி யோகிதா வர்தக்கிடம் லாக்கரை திறக்க கூறியுள்ளார்.
பயத்தில் லாக்கரை திறந்துகொடுக்க சுமார் ரூ.1.38 கோடி மதிப்பிலான தங்கத்தைப் பையில் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து ஓட முயன்றார். அப்போது, அவரை யோகிதா தடுக்க முயற்சித்ததால், கத்தியால் பலமுறை அவரை குத்தியுள்ளார். அருகிலிருந்த தேவ்ருகரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், துபே காருக்குள் ஏறி தப்பிப்பதற்குள், மடக்கி பிடித்தனர். இந்த தாக்குதலில் யோகிதா வர்தக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தேவ்ருகர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், துபேவை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி - சிசிடிவி காட்சி வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி