ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை, வாஷிங்டன் நகரில் உள்ளது. இது 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாகும். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை, வெள்ளை மாளிகை நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்தது. லஃபாய்ட்டி சதுக்கத்தின் வடபகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி மீது அந்த லாரி மோதி நின்றது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், லாரியை ஓட்டி வந்த 19 வயது இளைஞரை சுற்றிவளைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், லாரியை ஓட்டி வந்தவர் இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கண்டுலா (19) என்பது தெரியவந்தது. மிசோரியின் செட்டர்ஸ்பீல்டு பகுதியில் வசித்து வரும் அவர், லாரி ஒன்றை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்துள்ளார். எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து லாரியை போலீசார் சோதனை செய்த போது ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை. ஆனால், சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிக் கட்சிக்கொடியை வர்ஷித் வைத்திருந்தது தெரியவந்தது. அதை அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வர்ஷித்திடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் வேலை எதுவும் பார்க்கவில்லை என கூறிய அவர், அதிபர் பைடனை வெளியேற்றிவிட்டு அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.
அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முடிவு செய்ததாகவும், இதுதொடர்பாக பல மாதங்கள் திட்டமிட்டதாகவும் வர்ஷித் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, அதிபரை கடத்திச் செல்ல சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வர்ஷித்தை அதிரடியாக கைது செய்தனர்.
இதையும் படிங்க: Satyendar Jain: சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
இதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அவர், ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி ராபின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட வர்ஷித்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.
கைதான வர்ஷித் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: நக்சல் அமைப்பில் இருந்து வெளியேறி +2 பாஸ்.. நாக்பூர் சிறுமியின் பின்னணி என்ன?