அஸ்ஸாம்: கெண்டுகுரி பகுதியைச் சேர்ந்த நிதுமோனி லுகுரஷான் என்ற பெண் 10 மாத ஆண் குழந்தையுடன் காணாமல் போனதாக கடந்த 19-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி சரைடியோ மாவட்டத்திலுள்ள ராஜாபாரி தேயிலை தோட்டத்தில் நிதுமோனி லுகுரஷானின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இந்தக் கொலையை செய்தது ஒரு முதிர் தம்பதி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தத் தம்பதியை சிமாலுகுரி ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
இமாச்சல பிரதேசத்திற்கு ரயில் வழியாக தப்பிக்க முயற்சி செய்த பசந்தா கோகோய் மற்றும் ஹியாமை கோகோய் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களின் மகனான பிரசந்தா கோகோய் என்பவரையும் கைது செய்த போலீசார் அந்தத் தம்பதி கடத்திச் சென்ற 10 மாத குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இந்த வழக்கு குறித்து காவல்துறை எஸ்.பி சுப்ரஜ்யோதி போரா கூறுகையில், “இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு படுகொலை. வெகு நாட்களாக குழந்தையின்றி தவிக்கும் மகளின் கனவை நிறைவேற்றவே இத்தம்பதியினர் இந்தக் கொலையை செய்துள்ளனர். இந்தத் தம்பதியினர் இறந்துபோன பெண்ணான தாயான நிதுமோனியை ஒரு வேலை விஷயமாக தங்களது வீட்டிற்கு அழைத்துள்ளனர். பின், அவரிடமிருந்து குழந்தையை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அதற்கு நிதுமோனி மறுக்கவே அவரைத் தாக்கிக் கொன்று விட்டு குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உத்தராகண்டில் பைக்கும், டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து!