வாரணாசி : உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்து உள்ள ஞானவாபி மசூதி, கோயிலின் மீது கட்டப்பட்டுள்ளதா என்பதை அறியும் பொருட்டு, அறிவியல் பூர்வமான ஆய்வு மேற்கொள்வதற்காக, இந்திய தொல்லியல் துறை (ASI) குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 23ஆம் தேதி), இப்பகுதிக்கு வருகை தந்து உள்ளனர். “ஜூலை 24ஆம்தேதி, கணக்கெடுப்பு பணிகள் துவங்கும்” என்று, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், தங்களிடம் தெரிவித்து உள்ளதாக, வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் குறிப்பிட்டு உள்ளார்.
இந்து அமைப்பு தரப்பு வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ் கூறுகையில், ''இந்திய தொல்லியல் துறை குழுவினர், வாரணாசியை அடைந்து உள்ளனர். அவர்கள் திங்கள்கிழமை (ஜூலை 24ஆம் தேதி) காலை 7 மணியளவில் ஞானவாபி மசூதி வளாகத்தின் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளனர். கணக்கெடுப்பு குழுவினர் உடன் மனுதாரர்களின் வழக்கறிஞரும் இருப்பார்’’ என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, கோயிலின் மீது கட்டப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க, தேவையான இடங்களில் அகழ்வாராய்ச்சி உட்பட விரிவான அறிவியல் ரீதியிலான ஆய்வு நடத்துமாறு இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ் வெள்ளிக்கிழமை (ஜூலை 21ஆம் தேதி) உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மசூதியின் 'வசுகானா', பகுதியில், 'சிவலிங்கம்' இருந்ததாக என்று இந்து அமைப்பின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு உள்ளனர். மசூதி வளாகத்தில் உள்ள அந்த இடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில், கணக்கெடுப்பில் அது இடம்பெறாது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதிக்குள், கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இந்திய தொல்லியல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
தொழுகைக்கு இடையூறு விளைவிக்காத வகையில் கணக்கெடுப்பு: மசூதிக்குள் இஸ்லாமிய மக்கள் மேற்கொள்ளும் தொழுகைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கணக்கெடுப்புப் பணியை உறுதி செய்ய சர்வே குழு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கணக்கெடுப்பின் போது மசூதியின் சொத்துக்களுக்கு அதிகாரிகள் எந்த வகையிலும் சேதம் விளைவிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. வாரணாசி மாவட்ட நீதிமன்றம், இந்திய தொல்லியல் துறையின் குழுவின் மூலம் அறிவியல் ரீதியிலான ஆய்வுகளை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் மேற்கொள்ளலாம் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளது.
இந்து அமைப்பு தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், கடந்த ஜூலை 14ஆம் தேதி, மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் அறிவியல் ஆய்வுகோரி விண்ணப்பம் செய்து இருந்தார். அந்த இடம் "மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது" என்றும், மசூதி வளாகத்தில் உள்ள மேற்கு சுவரில் கோயிலின் "எச்சங்கள்" தென்படுவதாக, ஜெயின், அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டு உள்ளார்.